அறுசீர் ஆசிரிய விருத்தம் 2986. | வெம் படை, நிருதர், வீச விண்ணிடை மிடைந்த;வீரன் அம்பு இடை அறுக்க, சிந்தி அற்றன படும்' என்று, அஞ்சி, உம்பரும் இரியல்போனார்;உலகு எலாம் உலைந்து சாய்ந்த; கம்பம் இல் திசையில் நின்ற களிறும், கண் இமைத்த அன்றே. |
நிருதர் வீச - அரக்கர்கள் வீசியெறிவதால்; வெம்படை - கொடிய அப் படைக் கருவிகள்; விண்ணிடை மிடைந்த - வானத்தில் நெருங்கின; வீரன் அம்பு இடை அறுக்க - இராமபிரானின் அம்புகள் இடையே புகுந்து அறுத்ததால்; அற்றன - துணிபட்டனவாய்; சிந்திப் படும் - சிதறி (நம்மேல் ஊறு ஏற்பட) விழக்கூடும்; என்று - என்று எண்ணி; அஞ்சி - அஞ்சினவர்களாய்; உம்பரும் இரியல் போனார் - தேவர்களும் ஓடிப் போனார்கள்; உலகு எலாம் - மற்ற உலகங்கள் எல்லாம்; உலைந்து சாய்ந்த - நிலைகெட்டு நடுங்கித் தளர்ந்தன; கம்பம் இல் - நிலைபெயராத; திசையில் நின்ற களிறும் - திசைகளைச் சுமந்து நின்ற திக்கு யானைகளும்; கண் இமைத்த - (அச்சத்தால்) கண்களை மூடிக் கொண்டன. அன்று ஏ - அசைகள். அரக்கர் எறிந்த படைக்கலன்களை இராமபிரானின் அம்பு இடையே அறுத்ததால் அறுபட்ட அந்த ஆயுதங்கள் நம்மேல் படக்கூடுமென்று அஞ்சித் தேவர்களும் நிலைகெட்டோட, உலகமெல்லாம் நடுங்கித் தளர, திக்கு யானைகளும் அச்சத்தால் கண்ணிமைத்தன என்பது. தொடர்புயர்வு நவிற்சியணி. 112 |