கலி விருத்தம்

2987. அத் தலைத் தானையன்,
     அளவு இல் ஆற்றலன்,
முத் தலைக் குரிசில், பொன்
     முடியன்; முக்கணான்
கைத்தலைச் சூலமே
     அனைய காட்சியான்;
வைத தலைப் பகழியால் மழை
     செய் வில்லினான்.

    அத் தலைத் தானையன்- சிறந்த அந்தச் சேனையையுடைய தலைவன்
(யாரென்றால்); அளவு இல் ஆற்றலன் - அளவற்ற வலிமையுடையவனும்;
பொன் முடியன் - பொன்னாலாகிய கிரீடத்தையுடையவனும்; வைத்தலைப்
பகழியால் -
கூரிய நுனிகொண்ட அம்புகளால்; மழை செய் வில்லினான்-
மழை பொழிகின்ற வில்லையுடையவனும்; முக்கணான் கைத்தலை - மூன்று
கண்களையுடையவனான சிவபிரானின் கையிலுள்ள; சூலமே அனைய
காட்சியான் -
சூலம் போன்ற தோற்றத்தையுடையவனுமாகிய; முத் தலைக்
குரிசில் -
மூன்று தலைகளையுடைய திரிசிரா என்னும் வீரனாவான்.

     திரிசிரா என்னும் படைத் தலைவனின் தன்மையை இப் பாடல்
கூறுகிறது. மூன்று தலைகளைக் கொண்டமைக்கும். அழித்தல் தொழில்
செய்யுங் கொடுமைக்கும் சிவபெருமானின் சூலம் உவமையாயிற்று.     113