2988. அன்னவன் நடுவுற,
     'ஊழி ஆழி ஈது'
என்ன, வந்து, எங்கணும்
     இரைத்த சேனையுள்,
தன் நிகர் வீரனும்,
     தமியன், வில்லினன்,
துன் இருள் இடையது ஓர்
     விளக்கின் தோன்றினான்.

    அன்னவன் நடுவுற - அத்தகைய திரிசிரன் என்பவன் நடுவிலே
பொருந்தியிருக்க; 'ஊழி ஆழி ஈது' என்ன - ஊழிக் காலத்துப்
பெருங்கடல் இதுவென்று சொல்லும்படி; எங்கணும் வந்து - எல்லாப்
பக்கங்களிலும் வந்து; இரைத்த சேனையுள் - ஆரவாரித்த அரக்கர்
சேனையிலே; தன் நிகர் வீரனும் - (வேறு உவமையில்லாது) தன்னைத்
தானேயொத்த வீரனான இராமனும்; தமியன் வில்லினன் - தனியே
வில்லையேந்தியவனாய்; துன் இருள் இடையது - அடர்ந்த இருளின்
நடுவேயுள்ள; ஓர் விளக்கின் - ஒரு விளக்குப் போல; தோன்றினான் -
விளங்கினான்.

     திரிசிரா நடுவிலே பொருந்திய அரக்கச் சேனைகள் தன்னைச் சூழ்ந்து
நிற்க அவர்களுக்கு நடுவே இராமபிரான் இருளிடையே தோன்றும்
விளக்குப் போல விளங்கினான் என்பது.                          114