சேனையோடு திரிசிராவை இராமன் எதிர்த்துப் பொருதல் 2989. | ஓங்கு ஒளி வாளினன், உருமின் ஆர்ப்பினன், வீங்கிய கவசத்தன், வெய்ய கண்ணினன்- ஆங்கு-அவன் அணிக்கு எதிர் அணிகள் ஆக, நேர் தாங்கினன் இராமனும், சரத்தின் தானையால். | ஓங்கு ஒளி வாளினன் - மிக்க ஒளியையுடைய வாளையுடையவனும்; உருமின் ஆர்ப்பினன் - இடி போன்ற முழக்கத்தையுடையவனும்; வீங்கிய கவசத்தன் - பெரிய கவசத்தையுடையவனும்; வெய்ய கண்ணினன் - கொடிய கண்களையுடையவனுமான; ஆங்கு அவன் - அங்கே வந்த திரிசிரா என்னும் அரக்கனுடைய; அணிக்கு - படை வகுப்புகளுக்கு; எதிர் அணிகள் ஆக - எதிர்ப்படை வகுப்புக்களாக; இராமனும் - இராமபிரானும்; சரத்தின் தானையால் - அம்புகளாகிய சேனையால்; நேர் தாங்கினன் - எதிரிட்டு நின்றான். நான்கு படைகளமைந்த திரிசிரனது படை வகுப்புக்கு எதிரில் இராமன் அம்புகளைக் கொண்டு படை வகுத்திட்டான் என்பது. அதாவது கரனது சேனையில் எத்துணை யானை தேர் குதிரை காலாள்களுண்டோ அத்துணை யம்புகளை இராமன் அவற்றின் மேல் ஒழுங்காக எதிர் தொடுத்தான் என்பது இதன் கருத்தாகும். அரக்கனது பலவகைச் சேனையைத் தடுக்கத் தன்னிடம் போதிய படையில்லாக் குறையை இராமபிரான் தன் அம்புகளால் நிரப்பித் தடுத்து எதிர்த்தான் என்பது நயம். 115 |