2990. தாள் இடை அற்றன;
     தலையும் அற்றன;
தோள் இடை அற்றன;
     தொடையும் அற்றன;
வாள் இடை அற்றன;
     மழுவும் அற்றன;
கோள் இடை அற்றன;
     குடையும் அற்றன;

    தாள் இடை அற்றன - (அவ்வாறு இராமன் ஒழுங்குபட
எதிர்தொடுத்த அம்புகளால்) அரக்கர்களின் கால்கள் நடுவே அறுபட்டு
வீழ்ந்தன; தலையும் அற்றன - (அவ்வரக்கர்களின்) தலைகளும்
அறுபட்டன; தோள் இடை அற்றன - தோள்களும் துண்டிக்கப்பட்டன;
தொடையும் அற்றன - தொடைகளும் துண்டுபட்டன; வாள் இடை
அற்றன -
வாள்களும் பல முறிந்தன; மழுவும் அற்றன -
மழுப்படைகளும் முறிந்து விழுந்தன; கோள் இடை அற்றன -
(அவர்களின்) வலிமையும் போரிலே சிதைந்தது; குடையும் அற்றன -
குடைகளும் அழிந்தன.

     இராமனின் அம்புகளால் அரக்கப் படைகளின் கால்கள் முதலியன
அறுபட்டன என்பது.                                         116