2991.கொடியொடு கொடுஞ்சு இற,
     புரவிக் கூட்டு அற,
படியொடு படிந்தன, பருத்த
     தேர்; பணை
நெடிய வன் கட கரி
     புரண்ட, நெற்றியின்
இடியொடு முறிந்து வீழ்
     சிகரம் என்னவே.

    கொடியொடு - (தேர்களின் மேல் பறந்த) கொடிகளும்; கொடுஞ்சு
இற -
தேர் உறுப்பாகிய கொடிஞ்சி முறியவும்; புரவிக் கூட்டு அற -
குதிரைகளின் தொகுதிகள் துணிபட்டழியவும்; பருத்த தேர் - பெரிய
தேர்கள்; படியொடு படிந்தன - நிலத்திலே சாய்ந்தன; பணை நெடிய
வன் கடகரி -
பருத்து உயர்ந்த வலிய மத யானைகள்; நெற்றியின்
இடியொடு -
தன் உச்சியில் விழுந்த இடியால்; முறிந்து வீழ்சிகரம் என்ன
-
இடிந்து விழுகின்ற மலைச் சிகரங்கள் போல; புரண்ட - கீழே விழுந்து
புரண்டன; ஏ - ஈற்றசை.

     கொடிஞ்சி - தேர்த் தட்டின் முன் கைக்கு உதவியாகத் தாமரை
மொட்டு வடிவில் அமைத்துத் தொங்கவிட்டிருக்கும் ஓர் அழகிய உறுப்பு :
கொடுஞ்சு என இங்கே குறிக்கப்பட்டது.                          117