2992. | 'அற்றன சிரம்' என அறிதல் தேற்றலர், கொற்ற வெஞ் சிலை சரம் கோத்து வாங்குவார் இற்றவர்; இறாதவர் எழுந்து, விண்ணினைப் பற்றின மழை எனப் படை வழங்குவார். |
இற்றவர் - தலையறுபட்ட அரக்கர்கள்; சிரம் அற்றன என - (தம்) தலைகள் அறுபட்டனவென்று; அறிதல் தேற்றலர் - அறியாதவர்களாய்; கொற்ற வெம் சிலை சரம் கோத்து வாங்குவார் - வெற்றி தரும் கொடிய வில்லிலிருந்து அம்புகளைப் பூட்டியெய்வார்கள்; இறாதவர் - தலையறுபடாதவர்கள்; எழுந்து - எழுந்து; விண்ணினைப் பற்றின மழை என - ஆகாயத்தைக் கவிந்த மழை போல; படை வழங்குவார் - போர்க் கருவிகளை வீசுவார்கள். தலை அற்றமை தெரியாத பேராவேசம் விளங்குகிறது. இச் செய்யுளில் தலையறுபட்டவர். தலையறுபடாதவர் ஆகிய இரு வகை யரக்கர்களின் போர்ச் செயல்கள் குறிக்கப் பெறுகின்றன. ஒப்பு : 'அடுசிலைப் பகழி தொடுத்து விடப் புகுமளவினில் அயலெதிர் விட்டவர் வெட்டின உடல் சில இரு துணிபட்டன பட்ட பின் ஒரு துணி கருதும் இலக்கை யழிக்குமே' (க. பரணி 421) 118 |