2993. | கேடகத் தடக் கைய, கிரியின் தோற்றத்த, ஆடகக் கவசத்த, கவந்தம் ஆடுவ- பாடகத்து அரம்பையர் மருள, பல்வித நாடகத் தொழிலினை நடிப்ப ஒத்தவே. |
கேடகத் தடக் கைய - கேடகம் என்னும் படைக் கருவியையேந்திய பெரிய கையையுடையனவும்; கிரியின் தோற்றத்த - மலை போன்ற வடிவையுடையனவும்; ஆடகக் கவசத்த - பொன்னாலாகிய கவசங்களையுடையனவுமாகிய; கவந்தம் ஆடுவ - தலையற்ற உடற் குறைகள் துடித்துத் துள்ளுவன; பாடகத்து அரம்பையர் மருள - பாடகமாகிய காலணியையணிந்த தேவமாதர்கள் மயங்கும்படி; பல்வித நாடகத் தொழிலினை - பல வகைப்பட்ட நடனத் தொழில்களை; நடிப்ப ஒத்த - நடித்துக் காட்டுவன போன்றன. தலை அறுபட்ட வீரர்களின் உடற்குறைகள், ஆடல் வல்ல தேவமாதர்களும் கண்டு வியக்கும்படி, பலவாறு விசித்திரமாகக் கூத்தாடின என்பது. அரம்பையர் என்பது இங்கே பொதுவாகத் தேவ மகளிரைக் குறிக்கும். பாடகம் - ஒரு வகைக் காலணி. 119 |