2994. கவரி வெண் குடை எனும்
     நுரைய; கைம்மலைச்
சுவரன; கவந்தம் ஆழ்
     சுழிய; தண் துறை
பவர் இனப்படு மணி
     குவிக்கும் பண்ணைய;
உவரியைப் புதுக்கின-
     உதிர-ஆறுஅரோ.

    உதிர ஆறு - (போர்க் களத்தில் பெருகியோடிய) இரத்த ஆறுகள்;
கவரி வெண்குடை - வெண் சாமரங்களும் வெண் குடைகளும்; எனும்
நுரைய -
என்கின்ற நுரைகளைக் கொண்டன; கைம் மலைச் சுவரன -
இறந்த யானைகளாகிய பக்கச் சுவர்களையுடையனவாயின; கவந்தம் ஆழ்
சுழிய -
குறையுடல்கள் ஆழத்தக்க சுழிகளையுடையன; தண் துறை -
குளிர்ந்த நீர்த் துறைகளிலே; பவர் இனப் படு மணி குவிக்கும் -
நெருங்கிய பலவகைப்பட்ட இரத்தினங்களைக் கொண்டு வந்து குவிக்கின்ற;
பண்ணைய - சேணங்களாகிய படகுகளையுடையவையான; உவரியைப்
புதுக்கின -
கடலைப் புதிய தாக்கின.

     போரில் அறுபட்ட படைகளின் உதிரப் பெருக்கின் வருணனை
கூறியது இது. 'உவரியைப் புதுக்கின' என்பதன் விளக்கம் வருமாறு :
ஆற்றின் புது வெள்ளம் வேகமாகச் சென்று கடலிலே விழுந்து நெடுந்தூரம்
கடலின் நிறத்தை வேறுபடுத்திக் கரிய கடலைச் செந்நிறமாக்கின.

     கைம்மலை : யானை சுவர் இங்கே கரை எனும் பொருளினது.
உவமேயமாகிய சேணமும் உவமானமாகிய படகும் என இரு பொருளையும்
'பண்ணை' என்ற ஒரு சொல்லே தந்துள்ளது - சிலேடையுருவகவணி.

     சேணங்களில் பல வகையிரத்தினங்கள் பதிப்பதும் படகுகளில் பல
வகை இரத்தினங்களைக் கொண்டு வந்து சேர்த்தலும், கருதிப்
பண்ணைக்குப் 'பவரினப் படுபணி குவிக்கும்' என்ற அடைமொழி
கொடுத்தார், அரோ - ஈற்றசை.

     நதிக்கு அமையக் கூடிய நுரை, சுவர், சுழி பண்ணை முதலியன
இரத்த ஆற்றுக்கும்' உள்ளனவாயின.                            120