2995. சண்ட வெங் கடுங் கணை
     தடிய, தாம், சில
திண் திறல் வளை எயிற்று
     அரக்கர், தேவர் ஆய்,
வண்டு உழல் புரி
     குழல் மடந்தைமாரொடும்
கண்டனர், தம் உடல்-
     கவந்த நாடகம்.

    சண்ட வெங் கடுங்கணை - வலிய மிகக் கொடிய இராம
பாணங்கள்; தடிய - தாக்கிக் கொன்றமையால்; திண் திறல் வளை எயிற்று
சில அரக்கர் -
மிக்க வலிமையையும் வளைவான கோரைப்
பற்களையுமுடைய சில அரக்கர்கள்; தேவர் ஆய் - (வீர சொர்க்கம்
பெறும்) தேவர்களாகி; வண்டு உழல் புரிகுழல் மடந்தைமாரொடும் -
வண்டுகள் சூழ்ந்து மொய்க்கத்தக்க பின்னிய கூந்தலையுடைய தெய்வ
மகளிருடனே (கூடி); தம் உடல் கவந்த நாடகம் கண்டனர் -
தங்களுடைய உடற்குறைகளின் கூத்தாட்டத்தைப் பார்த்தார்கள்.

     தாம் - அசை. அரக்கரது உடல் இராமனது அம்புகளால் சின்ன
பின்னப்பட்டுத் துடித்துத்துள்ள உயிர் உடனே தேவரின் உடம்பையுற்று
அரம்பையரோடு கூடி அந்த உடம்புகளின் ஆட்டத்தை வியந்து கண்டன
என்பது.

     இராமபாணம் பட்டு இறந்தோர் விரைவில் சொர்க்கமெய்தித் தெய்வ
மகளிரோடு மகிழ்ந்து வாழ்வார்கள் என்பது இதனால் விளங்கும்.       121