2996. ஆய் வளை மகளிரொடு
     அமரர் ஈட்டத்தர்,-
தூய வெங் கடுங் கணை துணித்த
     தங்கள் தோள்,
பேய் ஒருதலை கொள,
     பிணங்கி, வாய்விடா
நாய் ஒருதலை கொள-
     நகையுற்றார், சிலர்.

    சிலர் - சில அரக்கர்கள்; அமரர் ஈட்டத்தர் - போரில் இறந்து
தேவர் கூட்டத்தில் சேர்ந்தவர்களாய்; ஆய் வளை மகளிரொடு - சிறந்த
வளையல்களையுடைய தேவமாதர்களுடன்; தூய வெங் கடுங் கணை
துணித்த -
தூய்மையான மிகக் கொடிய இராம பாணங்களால்
துண்டிக்கப்பட்ட; தங்கள் தோள் - தம்முடைய தோள்களை; பேய்
ஒருதலை கொள -
ஒரு பக்கம் பேய்கள் பற்றிக் கொள்ள; பிணங்கி -
(அவற்றோடு) மாறுபட்டு; வாய்விடா நாய் ஒரு தலை கொள - வாயால்
பற்றியதை விடாத நாய்கள் மற்றொரு பக்கத்திலே கவ்விக் கொள்ளக்
(கண்டு); நகையுற்றார் - வேடிக்கையாகப் பார்த்துச் சிரித்தார்கள்.

     ஆய்வளை - வளைகள் பலவற்றுள் தெரிந்தெடுத்த வளை; ஆய்தல் -
தேர்ந்தெடுத்தல்.                                             122