2997. | தெரி கணை மூழ்கலின் திறந்த மார்பினர், இரு வினை கடந்து போய் உம்பர் எய்தினார், 'நிருதர்தம் பெரும் படை நெடிது; நின்றவன் ஒருவன்' என்று, உள்ளத்தின் உலைவுற்றார், சிலர். |
தெரி கணை மூழ்கலின் - இராமனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்புகள் தைத்துப் பாய்தலால்; திறந்த மார்பினர் சிலர் - பிளக்கப்பட்ட மார்புகளையுடைய சில அரக்கர்கள்; இருவினை கடந்து போய் - தம்முடைய நல்வினை தீவினை மாய; உம்பர் எய்தினார் - மேலுலகம் அடைந்த சில அரக்கர்கள்; 'நிருதர் தம் பெரும்படை நெடிது - அரக்கர்களுடைய பெரிய சேனையோ மிக நீண்டது; நின்றவன் - (இவர்களை எதிர்த்து) நின்ற இராமபிரானோ; ஒருவன்' என்று - துணையற்ற ஒருவனே' என்று கருதி; உள்ளத்தின் உலைவு உற்றார் - மனத்தில் அச்சங் கொண்டார்கள். அரோ : ஈற்றசை. 123 |