2998.கைக் களிறு அன்னவன்
     பகழி, கண்டகர்
மெய்க் குலம் வேரொடும்
     துணித்தி வீழ்த்தின-
மைக் கரு மனத்து ஒரு வஞ்சன்,
     மாண்பு இலன்,
பொய்க் கரி கூறிய கொடுஞ்
     சொல் போலவே.

    கைக் களிறு அன்னவன் பகழி - துதிக்கையையுடைய ஆண்
யானை போன்ற இராமபிரானின் அம்புகள்; கண்டகர் மெய்க்குலம் - மிகக்
கொடிய அரக்கர்களின் உடற் கூட்டங்களை; வேரொடும் துணித்தி
வீழ்த்தின -
வேரோடு அறுத்துத் தள்ளிய காட்சிகள்; மாண்பு இலன் -
உயர்குணம் இல்லாதவனாகிய; மைக்கரு மனத்து ஒரு வஞ்சன் - மை
போன்று இருண்ட மனத்தையுடைய ஒரு வஞ்சகன்; பொய்க் கரி கூறிய -
நீதிமன்றத்தில் பொய்ச் சாட்சி சொன்ன; கொடுஞ் சொல் போல - கொடிய
சொற்களையொத்தன.

     பொய்ச் சாட்சி வார்த்தைகள் சொன்னவர்களது குலத்தை வேரோடு
அறுத்து அழிப்பது போல, இராமபாணங்கள் அரக்கர் குலத்தை வேரோடு
அறுத்துத் தள்ளின என்பது. பொய்ச் சாட்சியின் சொற்கள் வழக்கு
விசாரணையில் பயனற்று வீழ்வது போல் அரக்கர் உடல்கள் சீவனற்று
வீழ்ந்தன என்றும் விளக்கலாம். வலிமையிலும், உயர் தோற்றத்திலும்,
நடையிலும் இராமனுக்கு யானை உவமையாவது மட்டுமல்லாமல் யானைத்
துதிக்கை இராமனின் கைகளுக்குத் திரண்டுருண்டு நீண்ட வடிவில்
ஒப்புமையாதலும் பற்றிக் 'கைக் களிறு அன்னவன்' என யானைக்கும்
அடைமொழி தந்து கூறினார். கண்டகர் - முள்ளைப் போலக் கொடியவர்.
மெய்க் குலம் - உடற் கூட்டம்.                                 124