2999. | அஞ்சிறை அறுபதம் அடைந்த கீடத்தைத் தஞ்சு எனத் தன் மயம் ஆக்கும் தன்மைபோல், வஞ்சகத்து அரக்கரை வளைத்து, வள்ளல்தான், செஞ் சரத் தூய்மையால், தேவர் ஆக்கினான். |
அம் சிறை அறுபதம் - அழகான இறகுகளையுடைய குளவி; தஞ்சு என அடைந்த கீடத்தை - அடைக்கலமாகத் தன்னிடம் சேர்ந்த புழுக்களை; தன் மயம் ஆக்கும் தன்மை போல - தன் வடிவமாகச் செய்யும் தன்மை போல; வள்ளல் தான் - அருள் வள்ளலாகிய இராமன் ஆனவன்; வஞ்சகத்து அரக்கரை வளைத்து - வஞ்சனை நிரம்பிய அரக்கர்களை வளைத்துக் கொண்டு; செந் சரத் தூய்மையால் - தன்னுடைய சிறந்த அம்புகளின் தூய்மையால்; தேவர் ஆக்கினான் - (அவர்களைத்) தேவராகுமாறு செய்தான். குளவி புழுக்களைப் பிடித்துக் கொட்டித் தன் வடிவமாக்குதல் போலத் தேவனான இராமன் அரக்கர்களையழித்துத் தேவர்களாக்கினான் என்பது. குளவி புழுக்களைக் கொண்டு சென்று கூட்டில் வைத்து அவற்றின் தலையில் அடிக்கடி கொட்ட அவை குளவியையே நினைந்து கொண்டிருப்பதால் அதன் வடிவமாக மாறிச் சிறகு முளைக்கப் பெற்றுப் பறந்து செல்லும் தன்மையையடையுமென்பர். 125 |