3000.'வலம் கொள் போர், மானிடன்
     வலிந்து கொன்றமை,
அலங்கல் வேல் இராவணற்கு
     அறிவிப்பாம்' என,
சலம்கொள் போர் அரக்கர்தம்
     உருக்கள் தாங்கின,
இலங்கையின் உற்ற, அக்
     குருதி ஆறுஅரோ.

    'வலம் கொள் - வலிமை கொண்ட; போர் - போரில்; மானிடன்
வலிந்து கொன்றமை -
சிறந்த ஒரு மனிதனான இராமன் அரக்கர் பலரை
வலிமையாற் கொன்றதை; அலங்கல் வேல் இராவணற்கு - மாலையணிந்த
வேல் ஏந்திய இராவணனுக்கு; அறிவிப்பாம்' என - சென்று தெரிவிப்போம்
என்று; அக்குருதி ஆறு - அங்குள்ள அந்த இரத்த நதி; சலம் கொள்
போர் -
மாயப் போர் செய்த; அரக்கர் தம் உருக்கள் - அரக்கரின்
உடல்களை; தாங்கின - சுமந்து கொண்டு போய்; இலங்கையின் உற்ற -
(அவற்றை) இலங்கையில் சேர்த்தது. அரோ - ஈற்றசை.

     போரில் இறந்துவிட்ட அரக்கர்களின் உடல்களைச் சுமந்த இரத்தப்
பெருக்கு. கடலிலே கலந்து அந்த உடல்களை இலங்கை நகருக்குக்
கொண்டு சேர்த்தது என்பது.

     போரில் அரக்கர்களுக்கு உண்டான அழிவை இராவணனுக்குத்
தெரிவித்ததோடு இதனால் இராமனது பேராற்றலையும், அவனையெதிர்த்தால்
இராவணனுக்கும் இலங்கைக்கும் இதே கேடு சூழும் என்பதையும் அந்த
இரத்தப் பெருக்கு அறிவித்தது என்பது புலப்படும்.

     'வலங்கொள் போர் மானிடன்' என்று சொற்கூட்டி, மானிடனான
இராமனுக்கே வெற்றி என்பதைக் குறிப்பால் உணர்த்தியதாக நயம்
காணலுமாம்.                                                126