திரிசிரா இரு சிரங்களை இழத்தல் 3001. | சூழ்ந்த தார் நெடும் படை, பகழி சுற்றுறப் போழ்ந்து உயிர் குடித்தலின், புரளப் பொங்கினான், தாழ்ந்திலன்; முத் தலைத் தலைவன், சோரியின் ஆழ்ந்த தேர், அம்பரத்து ஓட்டி ஆர்க்கின்றான். |
சூழ்ந்த தார் நெடும்படை - தன்னைச் சூழ்ந்துள்ள அணிவகுத்து நிற்கும் பெரிய அரக்கச் சேனைகளை; பகழி - இராமபாணங்கள்; சுற்றுறப் போழ்ந்து - சுற்றிலும் வளைத்துக் கொண்டு பிளந்து; உயிர் குடித்தலின் - (அவ் அரக்கர்களின்) உயிர்களைப் பருகியதால்; புரள - (அவர்கள்) கீழே விழுந்து புரள; முத்தலைத் தலைவன் - (அதைக் கண்டு) திரிசிரா என்னும் படைத்தலைவன்; பொங்கினான் - கோபங் கொண்டவனாகி; தாழ்ந்திலன் - தாமதிக்காது; சோரியின் ஆழ்ந்த தேர் - இரத்த வெள்ளத்தில் அழுந்தியிருந்த தனது தேரை; அம்பரத்து ஓட்டி - ஆகாயத்திலே செலுத்தி; ஆர்க்கின்றான் - முழங்குகின்றான். இரத்தச் சேற்றில் அழுந்தியிருந்ததால் தரை மீது செல்லஇடமில்லாமல் திரிசிரா என்பவன் வான் வழியே தன் தேரைச்செலுத்தினான், என்பது. அம்பரம் - ஆகாயம். 127 |