3002. ஊன்றிய தேரினன்
     உருமின் வெங் கணை,
வான் தொடர் மழை என,
     வாய்மை யாவர்க்கும்
சான்று என நின்ற அத்
     தரும மன்னவன்
தோன்றல்தன் திரு
     உரு மறையத் தூவினான்.

    ஊன்றிய தேரினன் - (இராமனெதிரில்) நிலைநிறுத்திய தேரை
யுடையவனான அந்தத் திரிசிரா; வாய்மை - (தவறாத) சத்தியத்தில்;
யாவர்க்கும் சான்று என - எல்லோர்க்கும் ஓர் எடுத்துக்காட்டாக; நின்ற
-
விளங்கிய; அத் தரும மன்னவன் - அற நெறிவழுவாத அந்தத் தசரத
மன்னவனுக்கு; தோன்றல்தன் - மைந்தனான இராமபிரானின்; திரு உரு
மறைய -
அழகிய திருமேனி மறையும்படி; உருமின் வெம் கணை -
இடிபோன்ற கொடிய அம்புகளை; வான் தொடர் மழை என -
வானத்திலிருந்து இடைவிடாது பெய்யும் மழை போல; தூவினான் -
மிகுதியாகச் சொரிந்தான்.

     தசரதன் சம்பராசுரப் போரில் கைகேயிக்கு இரண்டு வரம் தருவதாக
வாக்குறுதியளித்தான்; அது தவறாதவாறு கைகேயியின் கொள்கைக்கு மாறு
சொல்லாமல் இராமனைப் பிரிந்தான்; அந்தப் புத்திர சோகத்தால் உயிர்
நீத்தான். அதனால் தசரதன் சத்தியம் தவறாமைக்கு யாவரும் போற்றும்
எடுத்துக்காட்டாயினான். ஆதலால் 'வாய்மை யாவர்க்கும் சான்றென நின்ற
அத் தரும மன்னவன்' என்றார்.

     தேரில் நின்ற திரிசிரா மேகத்திற்கும், அவன் செலுத்திய அம்புகள்
மழைக்கும் உவமையாம்.                                      128