3003. | தூவிய சரம் எலாம் துணிய, வெங் கணை ஏவினன் இராமனும்; ஏவி, ஏழ்-இரு பூ இயல் வாளியால், பொலம் கொள் தேர் அழித்து, ஆவி, வெம் பாகனை, அழித்து மாற்றினான். |
தூவிய சரம் எலாம் - (அந்தத் திரிசிரா) சொரிந்த அம்புகளெல்லாம்; துணிய - துண்டுபட்டு அழியுமாறு; இராமனும் - இராமபிரானும்; வெங்கணை ஏவினன் - கொடிய அம்புகளைத் தொடுத்தான்; ஏவி - அவ்வாறு தொடுத்து; பூ இயல் ஏழ் இரு வாளியால் - பொலிவுடைய பதினான்கு பாணங்களால்; பொலம்கொள் தேர் அழித்து - பொன் மயமான அவன் தேரை நாசப்படுத்தி; வெம் பாகனை - கொடிய அவனுடைய தேர்ச் சாரதியையும்; ஆவி அழித்து மாற்றினான் - உயிரழித்து அப் போர் நிலையை மாறுபடச் செய்தான். இராமன், தன்னை மறையத் தூவிய அம்புகளைத் துண்டித்துப் பதினான்கு அம்புகளை ஏவித் திரிசிராவின் தேரையழித்துத் தேர்ப் பாகனையும் ஒழித்தான் என்பது. பூ இயல் வாளி - பொலிவு பொருந்திய அம்பு. 129 |