3004. அன்றியும், அக் கணத்து,
     அமரர் ஆர்த்து எழ,
பொன் தெரி வடிம்புடைப்
     பொரு இல் வாளியால்,
வன் தொழில் தீயவன்
     மகுட மாத் தலை
ஒன்று ஒழித்து, இரண்டையும்
     உருட்டினான் அரோ.

    அன்றியும் - அவையல்லாமலும்; அக்கணத்து - அதே நேரத்தில்;
அமரர் ஆர்த்து எழ - தேவர்கள் (மகிழ்ச்சியால்) ஆரவாரஞ் செய்து
கொண்டாடும்படி; பொன் தெரி வடிம்பு உடை - பொன் மயமாய்
விளங்கும் கூரிய நுனியுடைய; பொரு இல் வாளியால் - ஒப்பற்ற
அம்புகளால்; வன் தொழில் தீயவன் - கொடுந் தொழில்களையுடைய
தீயவனான அத் திரிசிராவின்; மகுட மாத் தலை - பொன் முடியணிந்த
மூன்று பெரிய தலைகளுள்; ஒன்று ஒழிந்து இரண்டையும் - ஒன்றை
மட்டும் விட்டுவிட்டு மற்றைய இரண்டு தலைகளையும்; உருட்டினான் -
(துணிக்கப்பட்டுக்) கீழே விழுந்து உருளச் செய்தான்.

     இராமன் தன் ஒப்பற்ற பாணத்தால் அந்தத் திரிசிராவின் மூன்று
தலைகளில் இரண்டை உருளச் செய்தான் என்பது.                 130