திரிசிரா ஒரு தலையுடன் போர்செய்தல்

3005.தேர் அழிந்து, அவ் வழி,
     திரிசிரா எனும்
பேர் அழிந்ததனினும்,
     மறம் பிழைத்திலன்;
வார் அழிந்து உமிழ்
     சிலை, வான நாட்டுழிக்
கார் இழிந்தாலென,
     கணை வழங்கினான்.

    அவ்வழி - அந்தப் போர்க் களத்தில்; தேர் அழிந்து - தனது தேர்
அழியப் பெற்று; திரிசிரா எனும் பேர் அழிந்ததனினும் - திரிசிரன் என்ற
தன் காரணப் பெயர் அழிந்ததனாலும்; மறம் பிழைத்திலன் - வீரம்
நீங்காதவனாய்; வார் அழிந்து உமிழ் சிலை - (அவ்வரக்கன்) நீளம்
குறைந்து (வளைந்து) அம்புகளை வெளியிடும் தன்மையுள்ள (தன்)
வில்லிலிருந்து; வான நாட்டுழி - ஆகாயத்திலிருந்து; கார் இழிந்தாலென -
கூரிய மேகங்கள் பொழிந்தது போல; கணை வழங்கினான் - அம்பு மழை
பொழிந்தான்.

     தன் தேரும் மூன்று தலைகளுள் இரண்டு தலைகளும் அழிந்துங்கூட
அஞ்சாமல் வீரத்தோடு வானத்தில் நின்று அம்பு சொரிந்தான் திரிசிரன்
என்பது 'திரிசிராவெனும் பேர் அழிந்து' : மூன்று தலைகளைக்
கொண்டமையால் அமைந்த காரணப் பெயர் பொருந்தாமல் போன
நிலையைக் குறித்தது.                                          131