3006. | ஏற்றிய நுதலினன் இருண்ட கார் மழை தோற்றிய வில்லொடும் தொடர, மீமிசைக் காற்று இடை அழித்தென, கார் முகத்தையும் மாற்ற அரும்பகழியால், அறுத்து மாற்றினான். |
ஏற்றிய நுதலினன் - (கோபத்தால்) நெறித்து நெற்றியின் மேல் ஏற்றிய புருவத்தையுடைய இராமபிரான்; இருண்ட கார் மழை தோற்றிய வில்லொடும் - இருண்ட கார்காலத்து மேகம் மழையை உண்டாக்குகின்றது போல விளங்கிய தன் வில்லுடன்; தொடர - விடாது நெருங்கிப் போர் செய்ய; மீ மிசைக் காற்று இடை அழித்தென - வானத்தின் மேல் அடிக்கின்ற காற்று (மேகத்தை) இடையிலே புகுந்து சிதறியழித்தது போல (அழியுமாறு); கார்முகத்தையும் - திரிசிரனது வில்லையும்; மாற்ற அருபகழியால் அறுத்து மாற்றினான் - யாராலும் விலக்க இயலாத தன் பாணங்களால் வெட்டி யெறிந்தான். பின்னும் திரிசிரா தொடர்ந்து போர் செய்ய, இராமபிரான் அவனது வில்லையறுத்தெறிந்தான் என்பது. ஏற்றின நுதல் : நெற்றி நுதல் மேல் ஏறுதல் வீரத்தில் தோன்றும் மெய்ப்பாடுகளில் ஒன்று. முந்தின பாடலில் 'திரிசிரா' 'கார் இழிந்தாலெனக் கணைகள் சிந்தினான்' என்று கூறி இச் செய்யுளில் இராமபிரான், 'கார் மழை தோற்றிய வில்லொடும் தொடர்ந்தான்' என்று இரண்டிடத்தும் ஒரே உவமையையே அமைத்தது நயம். சரங்களுக்கு மழையும், பகழிக்குக் காற்றும் உவமைகளாம். 'ஏற்றிய நுதலினன்' என்ற தொடரைத் திரிசிரனுக்கு ஆக்கி உரை செய்வாரும் உளர். 132 |