கலிநிலைத் துறை

3007.வில் இழந்தனன் என்னினும்,
     விழித்த வாள் முகத்தின்
எல் இழந்திலன்; இழந்திலன்
     வெங் கதம்; இடிக்கும்
சொல் இழந்திலன்; தோள்
     வலி இழந்திலன்; சொரியும்
கல் இழந்திலன்; இழந்திலன்
     கறங்கு எனத் திரிதல்.

    வில் இழந்தனன் என்னினும் - (அத் திரிசிரன்) வில்லையிழந்து
விட்டானென்றாலும்; விழித்த வாள் முகத்தின் எல் இழந்திலன் -
உறுத்துப் பார்க்கின்ற ஒளிமிக்க தனது முகத்தின் ஒளியை
இழந்துவிடவில்லை; வெம் கதம் இழந்திலன் - கொடிய கோபத்தை
இழந்தானில்லை; இடிக்கும் சொல் இழந்திலன் - இடி முழக்கம் போலப்
பேசும் வீர வார்த்தைகளை இழந்தானில்லை; தோள் வலி இழந்திலன் -
தோள்களின் வலிமையையும் இழந்தானில்லை; சொரியும் கல் இழந்திலன்-
(இராமன்மேல்) பொழியும் கற்களை இழந்தானில்லை; கறங்கு எனத் திரிதல்
இழந்திலன் -
காற்றாடி போலச் சுழன்று திரிவதையும் விட்டுவிட்டானில்லை.

     வில் ஒழிந்த பின்பும் அத் திரிசிரன் அச்சமின்றி வீரமொழிகளைப்
பேசிக் கொண்டு, தான் ஒருவனே எல்லாப் பக்கமும் சுற்றி வந்து தோள்
வலிமையால் கற்களையெடுத்து இராமன் மேல் சொரிந்தான் என்பது. கறங்கு
: காற்றாடி. அவன் முகத்தில் ஒளி இழவாமையையும், மனத்தில் துணிவு
இழவாமையையும் அறியக் கிடத்தலை விளக்குவார் 'முகத்தின் எல்
இழந்திலன்' என்றார். எல் - விளக்கம், ஒளி.                      133