திரிசிரா மடியக் கண்ட அரக்கர்கள் சிதறியோடுதல் 3009. | அற்ற தாளொடு தோளிலன், அயில் எயிறு இலங்க, பொற்றை மா முழைப் புலாலுடை வாயினின், புகுந்து பற்ற ஆதரிப்பான்தனை நோக்கினன்; பரிவான், கொற்ற வார் சரத்து, ஒழிந்தது ஓர் சிரத்தையும் குறைத்தான். |
அற்ற தாளொடு தோளிலன் - கால்களும் கைகளும் அறுபட்டவனாகி; அயில் எயிறு இலங்க - (அதற்குப் பின்பும்) தன் கூரிய பற்கள் தோன்றுமாறு; பொற்றை மா முழைப் புலால் உடை வாயினின் - மலையின் பெரிய குகை போன்ற புலால் நாற்றம் வீசும் தன் வாயினால்; புகுந்து பற்ற ஆதரிப்பான்தனை - (தன் மேல்) விழுந்து தனை (இராமனைப்) பற்றி விழுங்க விருப்பமுற்ற அத் திரிசிரனை; நோக்கினன் - பார்த்து (இராமன்); பரிவான் - (அவன்மேல்) இரக்கங் கொண்டவனாய்; கொற்ற வார் சரத்து - வெற்றி தரும் தனது நீண்ட அம்பினால்; ஒழிந்தது ஓர் சிரத்தையும் குறைத்தான் - அறுக்கப்படாது எஞ்சியிருந்த ஒரு தலையையும் துணித்தான். படைக் கருவிகளையிழந்தவனாய்க் கால் கைகளாகிய முக்கிய உறுப்புக்களும் அறுபட்டு நின்ற நிலையிலும் அவனது கொடுமை நீங்காமல் இராமனை விழுங்கிவிடக் கருதியவனிடம் இராமன் இரக்கப்பட்டு அவனது எஞ்சிய சிரத்தையும் துண்டித்து வீழ்த்தினான் என்பது. பொற்றை - மலை. 135 |