3010. | திரிசிரா எனும் சிகரம் மண் சேர்தலும், செறிந்த நிருதர் ஓடினர், தூடணன் விலக்கவும் நில்லார்;- பருதி வாளினர், கேடகத் தடக் கையர், பரந்த குருதி நீரிடை, வார் கழல் கொழுங் குடர் தொடக்க. |
திரிசிரா எனும் சிகரம் - திரிசிரன் என்னும் மலைச் சிகரம்; மண் சேர்தலும் - தரையில் விழுந்ததும்; தூடணன் விலக்கவும் நில்லார் - தூடணன் என்ற சேனைத் தலைவன் (தங்களைத்) தடுக்கவும் நில்லாதவர்களாய்; பருதி வாளினர் - கதிரவனைப் போல் ஒளி வீசும் வாட்படையையுடையவர்களும்; கேடகத் தடக்கையர் - கேடகங்களைப் பிடித்த பெரிய கைகளையுடையவர்களுமாகிய; செறிந்த நிருதர் - (முன்பு) நெருங்கி நின்ற அரக்கர்கள்; வார் கழல் - நீண்ட கால்கள்; பரந்த குருதி நீரிடை - பரவிய இரத்த வெள்ளத்திலுள்ள; கொழுங் குடர் - கொழுத்த குடல்களிலே; தொடக்க - மாட்டிக் கொண்டு தடை செய்ய; ஓடினர் - ஓடினார்கள். போரில் எதிர்த்து நிற்க முடியாமல் மிக அஞ்சி ஓடிப் போகின்ற நிலையிலும் சிலர்க்கு அவ்வாறு விரைந்து செல்ல முடியாதபடி தற்செயலாகத் தடை நேர்கின்ற விதியின் கொடுமை ஈற்றடியில் விளங்கும். கைகளில் படைக்கலம் இருந்தும் போர்க்குத் துணியாத அவர்களது ஆற்றலின்மையைப் புலப்படுத்துவதற்கு, 'பருதி வாளினர் கேடகத் தடக்கையர்' என்ற அடைமொழி கொடுத்தார். படைக் கலங்களையும் கை, கால் முதலிய உறுப்புகளையும் இழந்த நிலையிலும் போர் துறவர் வீரனாகிய திரிசிரனின் பெருமையை (3007, 3008) படைக்கலங்கள் இருந்தும் ஓடிய அரக்கர் சிறுமையொடு ஒப்பிட்டுணர்க. 136 |