3011. | கணத்தின் மேல் நின்ற வானவர் கை புடைத்து ஆர்த்தார், பணத்தின்மேல் நிலம் குழியுற, கால் கொடு பதைப்பார், நிணத்தின்மேல் விழுந்து அழுந்தினர் சிலர்; சிலர், நிவந்த பிணத்தின்மேல் விழுந்து உருண்டனர், உயிர் கொடு பிழைப்பார். |
கணத்தின் மேல் நின்ற வானவர் - (அரக்கர்களின் கால்கள் களத்தில் கிடந்த குடல்களில் சிக்கியதைக் கண்டு) கூட்டமாக வானத்தில் திரண்டு நின்ற தேவர்கள்; கைபுடைத்து ஆர்த்தார் - மகிழ்ச்சியோடு பரிகசித்துக் கைகொட்டி யாரவாரித்தார்கள்; சிலர் - சில அரக்கர்கள்; பணத்தின் மேல் நிலம் குழி உற - (ஆதிசேடனாகிய பாம்பின்) படங்களின் மேலுள்ள பூமி குழிபடும்படி; கால் கொடு பதைப்பார் - (தங்கள்) கால்களைப் பதிய வைத்து விரைந்தோடினவர்களாய்; நிணத்தின் மேல் விழுந்து அழுந்தினர் - (அக் களத்தில் கிடந்த) கொழுப்பில் வழுக்கி விழுந்து (அந்தச் சேற்றிலே) அழுந்தினார்கள்; சிலர் - மற்றும் சிலர்; உயிர் கொடு பிழைப்பார் - உயிர் நீங்காதபடி காத்து கொண்டு பிழைத்தோட முயன்றவர்களாய்; நிவந்த பிணத்தின் மேல் விழுந்து உருண்டனர் - உயர்ந்து கிடந்த பிணங்களின்மேல் இடறி விழுந்து கீழே புரண்டார்கள். ஓடிச் செல்லும் அரக்கர்களின் உடற்பார மிகுதியையும் செல்லும் வேகத்தின் மிகுதியையும் இச் செய்யுள் விளக்குகின்றது. 'பணத்தின் மேனிலம் குலைவுறல்' - ஓடும் அரக்கரின் வேகத்தாலும் பளுவாலும் ஆகும். 137 |