3012.வேய்ந்த வாளொடு வேல் இடை
     மிடைந்தன வெட்ட,
ஓய்ந்துளார் சிலர்; உலந்தனர் உதிர
     நீர் ஆற்றில்
பாய்ந்து, கால் பறித்து அழுந்தினர்
     சிலர்; சிலர் பயத்தால்
நீந்தினார், நெடுங் குருதிஅம் கடல்
     புக்கு நிலையார்.

    சிலர் - (அஞ்சியோடுகின்ற) சில அரக்கர்கள்; இடை வேய்ந்த
வாளொடு வேல் -
வழியிலே (இறந்து கிடக்கின்ற அரக்கர்களின்)
கைகளில் கொண்டுள்ள வாள்களும் வேல்களும்; மிடைந்தன வெட்ட -
நெருங்கினவாய் (தம் கால்களை) வெட்டுதலாலே; ஓய்ந்துளார் - ஓட
முடியாமல் தளர்ச்சியடைந்தார்கள்; சிலர் - சில அரக்கர்; உலந்தனர் உதிர
நீர் ஆற்றில் -
முன்பு இறந்தவர்களான அரக்கர்களின் இரத்த நதியில்;
பாய்ந்து கால் பறித்து - தாவி விழுந்து கால்கள் இழுக்கப்பட்டு;
அழுந்தினர் - மூழ்கிவிட்டார்கள்; சிலர் - இன்னும் சில அரக்கர்;
பயத்தால் - அச்சத்தால்; நெடுங் குருதி அம் கடல்புக்கு - பெரிய
இரத்தக் கடலில் இறங்கி; நீந்தினார் நிலையார் - நீந்திச் சென்று, அங்கே
நிலை கொள்ளாதவராய்த் தத்தளித்தார்கள்.

     உயிர் தப்புவதற்காக அரக்கர் சிலர் ஓடும்போது அவரைப்
போர்க்களத்தில் நெருங்கிக் கிடக்கின்ற வாள்களும் வேல்களும் ஊறு
செய்ய, அதனால் அவர்கள் நடை ஓய்ந்தவராயினார், ஒரு சிலர்
குருதியாற்றால் இழுக்கப்பட்டு அழுந்தினர், இன்னும் சிலர் அச்சத்தால்
இரத்தக் கடலில் இறங்கி நீந்திக் கொண்டே அதைக் கடந்து அப்பாலே
சென்றாவது உயிர் பிழைக்கலாமென்று துணிய ஆனாலும் கை கால் ஓய்ந்து
தளர்ந்தனர். அரக்கர்கள் தம் கையிற் பிடித்த படைக் கருவிகள் போர்
வெற்றிக்கு உதவாமல் கைகளுக்கு ஓர் அணிகலம் போல விளங்கினமையால்
'வேய்ந்த வாளொடு வேல்' என்றார்.                             138