3013. | மண்டி ஓடினர் சிலர், நெடுங் கட கரி வயிற்றுப் புண் திறந்த மாமுழையிடை வாளொடும் புகுவார், தொண்டை நீங்கிய கவந்தத்தை, 'துணைவ! நீ எம்மைக் "கண்டிலேன்" எனப் புகல்' என, கை தலைக் கொள்வார். |
மண்டி ஓடினர் சிலர் - விரைந்த ஓடின சில அரக்கர்கள்; நெடுங் கடகரி வயிற்று - பெரிய மத யானைகளின் வயிற்றில்; புண் திறந்த - (இராமபாணத்தால் உண்டான) புண்ணாலாகிய (பெருந் துளையென்னும்); மா முழையிடை - பெரிய குகைகளில்; வாளொடும் புகுவார் - தம் கைவாளோடு உள்ளே நுழைந்து செல்பவர்களாய்; தொண்டை நீங்கிய கவந்தத்தை - தொண்டையறுபட்ட குறையுடலைப் பார்த்து (சிலர்); 'துணைவ - 'நண்பனே!; நீ எம்மை - நீ எங்களை; "கண்டிலேன்" என - "பார்க்கவில்லை" யென்று; புகல்' என - சொல்வாய்' என்று வேண்டி; கை தலைக் கொள்வார் - தங்கள் கைகளைத் தலைமேற் கொண்டு (அந்தக் குறையுடலை) வணங்கி நிற்பார்கள். இராமனது பாணத்திற்கு அஞ்சி மலைக் குகையில் ஓடியொளிந்து உயிர் பிழைக்கக் கருதுபவர் இடையிலே பெரிய யானையின் வயிற்றில் உண்டான புண்ணாகிய துளையைக் கண்டு அந்தத் துளையே மலைக் குகையென்று மயங்கி அதனுள்ளே ஒளிந்து கொள்ளச் சென்றார்கள்; அவ்வாறு செல்கையில் அருகில் நின்ற தலையற்ற உடலைப் பார்த்து 'இராமன் எங்களைத் தேடி வந்தால் நீ எங்களைக் காணவில்லையென்று சொல்' என்று வேண்டிக் கைகூப்பி வணங்கினர் என்பது. உயர்வு நவிற்சியின் உச்சம் காண்க. 139 |