3014. | கச்சும் வாளும் தம் கால் தொடர்ந்து ஈர்வன காணார், அச்சம் என்பது ஒன்று உருவு கொண்டாலென, அழிவார்; உச்ச வீரன் கைச் சுடு சரம் நிருதர் நெஞ்சு உருவத் தச்சு நின்றன கண்டனர், அவ் வழித் தவிர்ந்தார். |
கச்சும் வாளும் - (தமது) கச்சும் (அதில் செருகப்பட்ட) உடை வாளும்; தம் கால் தொடர்ந்து ஈர்வன - (விரைந்தோடும்போது) நழுவி விழுந்து தங்கள் கால்களைச் சுற்றிக் கொண்டு அறுப்பதை; காணார் - தெரிந்து கொள்ளாதவர்களாய்; (இராமனின் அம்புகளே தம்மை அறுக்கின்றன என்று கருதி); அச்சம் என்பது ஒன்று உருவு கொண்டால் என - பயம் என்கின்ற ஒரு குணமே ஓர் உருவம் கொண்டு வந்தது போல; அழிவார் - மனமழிவார் (அந்த இடத்தில்); நிருதர் நெஞ்சு உருவத் தச்சு நின்றன - (அங்கே கிடக்கின்ற) அரக்கர்களின் மார்பு முழுவதும் துளைபடும்படி தைத்து நின்றவையான; உச்ச வீரன் கைச் சுடு சரம் - சிறந்த வீரனான இராமனது கையினால் எய்யப்பட்ட கொடிய அம்புகளை; கண்டனர் - பார்த்தவர்களாய்; அவ்வழித் தவிர்ந்தார் - அந்த வழியே (தாம் செல்லுவதை) விட்டொழித்தார்கள். 'மருண்டவன் கண்ணுக்கு இருண்ட தெல்லாம் பேய்' என்றபடி அச்சங் கொண்ட அரக்கர்களுக்குத் தம் கச்சும் வாளுமே அச்சத்திற்குக் காரணமாயின; அத்துடன் பிறர்மேல் தைத்து நின்ற அம்புகளைக் கண்டு அவை தம் உடலிலும் தைக்குமோ என்ற ஐயத்தைத் தரவே அவ்வழியே செல்லுவதையும் தவிர்த்தனர் என்பது. உச்சம் - உயர்வு; தச்சு - தைத்து என்பதன் போலி. 140 |