புறங்கொடுப்பவரைத் தேற்றித், தூடணன் வீரவுரை கூறல் 3015. | அனையர் ஆகிய அரக்கரை, ' "ஆண் தொழிற்கு அமைந்த வினையம் நீங்கிய மனித்தரை வெருவன்மின்" என்னா, நினையும் நான் உமக்கு உரைப்பதும் உண்டு' என, நின்றே, துனையும் வாம் பரித் தேரினன் தூடணன் சொன்னான். |
அனையர் ஆகிய அரக்கரை - அத்தன்மையராய் அஞ்சியோடுகின்ற இராக்கதர்களை (நோக்கி); துனையும் வாம் பரித் தேரினன் தூடணன் - விரைந்து தாவிச் செல்லும் குதிரைகள் பூட்டப் பெற்ற தேரின் மேல் ஏறியவனான தூடணன் என்னும் படைத் தலைவன்; "ஆண் தொழிற்கு அமைந்த - 'ஆண்மைச் செயலுக்குப் பொருந்திய; 'வினையம் நீங்கிய மனித்தரை - தந்திரங்களை மேற்கொள்ளாத இந்த மனிதர்களைக் கண்டு; வெருவன்மின்" என்னா - நீங்கள் அஞ்சாதீர்கள் என்று கூறி; 'நான் நினையும் உமக்கு உரைப்பதும் உண்டு' என - 'நான் கருதக் கூடிய ஒன்றை உங்களுக்குச் சொல்ல வேண்டியுள்ள' தென்று; நின்று சொன்னான் - ஓரிடத்தில் நின்று (அவர்களுக்குக்) கூறினான். தங்களைப் போல மாயையால் வஞ்சகப் போரைச் செய்யாமல் சூதின்றித் தருமப் போர் செய்வதையே இராமலக்குவர்க்கு ஒரு குறையாக்கி 'ஆண் தொழிற்கு அமைந்த வினையம் நீங்கிய மனித்தர்' என்றான். மனித்தர் - விரித்தல் விகாரம். வினையம் - சாமர்த்தியம் அல்லது உபாயமும் ஆம். 141 |