3016.'வச்சை ஆம் எனும் பயம் மனத்து
     உண்டு என வாழும்
கொச்சை மாந்தரைக் கோல் வளை
     மகளிரும் கூசார்;
நிச்சயம் எனும் கவசம்தான்
     நிலைநிற்பது அன்றி,
அச்சம் என்னும் ஈது ஆர் உயிர்க்கு
     அருந் துணை ஆமோ?

    'வச்சை ஆம் எனும் - பழிப்புக்கு இடமாகும் என்று
சொல்லப்படுகின்ற; பயம் மனத்து உண்டு என வாழும் - அச்சமானது
தமது மனத்திலே உள்ளதாக உயிர் வாழ்கின்ற; கொச்சை மாந்தரை -
இழிந்த மனிதர்களுக்கு; கோல்வளை மகளிரும் - அழகான வளையல்
அணிந்த பெண்களும்; கூசார் - அஞ்சமாட்டார்கள் (அதுவல்லாமல்);
நிச்சயம் எனும் கவசம்தான் - மனத் துணிவு என்கின்ற கவசமே; நிலை
நிற்பது அன்றி -
(போரில் உயிரைக் காத்து) நிற்கக் கூடியதல்லாமல்;
அச்சம் என்னும் ஈது - (உங்களிடமுள்ள) பயம் என்கின்ற இக்குணம்; ஆர்
உயிர்க்கு அருந்துணை ஆமோ -
அரிய உயிருக்கு அருமையான காக்கும்
துணையாகுமோ (ஆகாது).

     பழிப்புக்குக் காரணமான பயத்தை மனத்திலே கொண்டு நாமும்
பிழைத்திருக்கிறோமென்று சொல்லியவாறு இழிந்த மனிதர்களிடம் மகளிரும்
கூசாது அலட்சியம் செய்வார்கள்; ஆகவே, இவ்வாறான அச்சத்தைவிட்டு
மனவுறுதி கொள்வதே உயிர்க்குக் கவசம் போல அரணாகும் என்பது.

     வசையென்பது எதுகை நோக்கி வச்சையென விரிந்தது. கோல் -
கோலம் என்பதன் விகாரம்; கோலம் - அழகு. 'அச்சத்தையே குணமாகக்
கொண்ட மாந்தரைக் கண்டு அச்சமே அற்ற அரக்கர் அஞ்சலாமோ' என்று
கூறினான், தூடணன். கொச்சை மாக்கள் - இழிந்த மனிதர்.          142