3018. | 'இங்கு ஓர் மானிடற்கு, இத்தனை வீரர்கள், இடைந்தீர்; உம் கை வாளொடு போய் விழுந்து, ஊர் புகலுற்றீர்; கொங்கை மார்பிடைக் குளிப்புறக் களிப்புறு கொழுங் கண் நங்கைமார்களைப் புல்லுதிரோ? நலம் நுகர்வீர்! |
'இங்கு ஓர் மானிடற்கு - இங்குப் போருக்கு வந்த தனி மனிதன் ஒருவனுக்கு; இத்தனை வீரர்கள் இடைந்தீர் - நீங்கள் இவ்வளவு வீரர்களும் பின்னிட்டு ஓடலானீர்கள்; உம் கை வாளொடு போய் விழுந்து- உங்கள் கையிலுள்ள வாட்படையோடு ஒருவர் மேல் ஒருவர் மோதி விழுந்து கொண்டு; ஊர் புகலுற்றீர் - விரைந்து ஊருக்குள்ளே புகுந்து கொள்ள முற்பட்டீர்கள்; களிப்புறு - (அவ்வாறு ஒளிந்தது மட்டுமல்லாமல்) களிப்புக் கொண்டு; கொங்கை மார்பிடைக் குளிப்புற - தனங்கள் மார்பிலே அழுந்தும்படி; உம் கொழுங்கண் நங்கைமார்களை - மதர்த்த கண்களையுடைய உங்கள் மனைவியரை; புல்லு திரோ - அணைப்பீர்களோ? இத்துணை வீரர்களிருந்தும் படைக் கருவிகளை இழவாதிருந்தும், தனி ஒரு மனிதனுக்கு அஞ்சியோடி ஒளிக்க முற்பட்டு ஆண்மையிழந்த நீங்கள் நாணமின்றி எவ்வாறு உங்கள் மனைவியரைச் சேர்விரென்று இகழ்ந்தான் என்பது. அதுவல்லாமலும் உங்களது ஆண்மை பகைவன்முன் நின்று பொருது வெல்லுவதற்கு அமையாமல் உங்கள் மனைவியரைத் தழுவுவதற்கே யமைந்தது என்ற இகழ்ச்சிக் குறிப்பும் தோன்றும். 144 |