3019. | 'செம்பு காட்டிய கண் இணை பால் எனத் தெளிந்தீர்! வெம்பு காட்டிடை நுழைதொறும், வெரிந் உறப் பாய்ந்த கொம்பு காட்டுதிரோ, தட மார்பிடைக் குளித்த அம்பு காட்டுதிரோ, குல மங்கையர்க்கு? அம்மா! |
'செம்பு காட்டிய கண் இணை - போரில் கோபத்தால் செம்பின் நிறம் போலச் சிவந்து தோன்றிய உங்கள் இரண்டு கண்களும்; பால் எனத் தெளிந்தீர்! - (அச்சத்தால்) பால் போல் வெளுத்துத் தெளிவடையப் பெற்றுள்ளீர்; குல மங்கையர்க்கு - நற்குலத்தில் பிறந்த உங்கள் மனைவியர்க்கு; வெம்பு காட்டிடை நுழைதொறும் - கொடிய காடுகளிடையே (நீங்கள்) நுழைந்து ஓடும்போதெல்லாம்; வெரிந் உறப் பாய்ந்த - உங்கள் முதுகிலே நன்றாகப் பாய்ந்து தாக்கிய; கொம்பு காட்டுதிரோ - மரக் கொம்புகளாலாகும் புண்களைக் காட்டுவீர்களோ?; தட மார்பிடைக் குளித்த - (அன்றி) பெரிய மார்பிலே தைத்த; அம்பு காட்டுதிரோ - அம்புகளாலான புண்களைக் காட்டுவீர்களோ? (யாது செய்வீர்?). அம்மா - இரக்கச் சொல். 'போர்க்குப் புறப்பட்டு வந்த நீங்கள் மீண்டு சென்று உங்கள் வெற்றியை எதிர் நோக்கும் மனைவியர்க்கு அப் போரில் மார்பிலே பட்ட புண்களைக் காட்டி மகிழ்வித்தலன்றோ சிறப்பு? பகைவனுக்கு அஞ்சி அடர்ந்த வனத்தில் நுழைந்தோடும் போது முதுகிலே மரக் கொம்பு பட்ட புண்ணைக் காட்டினால் இகழ்ச்சிக்கு இடனாகுமல்லவா?' என்கிறான். செம்பெனச் சிவத்தல் சினத்துக்கும் பால் என வெளிறித் தெளிதல் அச்சத்துக்கும் மெய்ப்பாடுகள். 145 |