3020. | 'ஏக்கம் இங்கு இதன்மேலும் உண்டோ? இகல் மனிதன் ஆக்கும் வெஞ் சமத்து, ஆண்மை அவ் அமரர்க்கும் அரிதாத் தாக்க அரும் புயத்து உம் குலத் தலைமகன் தங்கை மூக்கொடு அன்றி, நும் முதுகொடும் போம் பழிமுயன்றீர். |
'இகல் மனிதன் - பகைமையுள்ள இந்த மனிதன் ஒருவன்; ஆக்கும் வெம் சமத்து ஆண்மை - செய்கின்ற கொடிய போர்த் திறமை; அவ் அமரர்க்கும் அரிதா - (இந்திரன் முதலிய) அத் தேவர்கள் பலர்க்கும் இல்லாததென்று சொல்லும்படி; தாக்க அரும் புயத்து - யாராலும் எதிர்த்துத் தாக்கவொண்ணாத தோள் வலிமையுடைய; உம் குலத் தலைமகன் - உங்கள் குலத்துத் தலைவனான இராவணனின்; தங்கை - தங்கையான சூர்ப்பணகையின்; மூக்கொடு அன்றி - மூக்கு அறுபட்டுப் போனதோடு மட்டுமல்லாமல்; நும் முதுகொடும் போம் பழி - நீங்கள் புறமுதுகு காட்டிச் செல்வதனால் அமையும் பழிச் சொல்லையும்; முயன்றீர்- உண்டாக்கிவிட்டீர்கள்; இங்கு இதன் மேலும் ஏக்கம் உண்டோ - இங்கு நடந்த இதற்கு மேலும் ஓர் இழிந்த செயலுண்டோ? (இல்லை என்றபடி) சிறந்த தேவர்களின் எதிரில் பின்னிடாத நீங்கள் இந்த இழிந்த மனிதனுக்குப் பின்னிடுவதால், இம் மனிதனிடமுள்ள போராண்மை தேவர்களுக்குமில்லை யென்றாகிறது. மேலும், உங்கள் குலத் தலைவனின் தங்கை அடைந்த அவமானத்தை நீங்கள் போர் செய்து பகைவரையழித்தலால் ஒழிக்க வேண்டுவதாயிருக்க, அதைச் செய்யாமல் அந்தப் பழியோடு நீங்கள் புறமுதுகிட்டோடும் அவமானத்தையும் உண்டாக்க முற்பட்டீர்களேயென்று தூடணன் கேட்டான். வீரத்துக்கு உண்டாம் பழி இகழ்ந்து கூறப்படுகிறது. முதுகொடும் - இறந்தது தழுவிய எச்சம். சமம் - சமரம்; போர். 146 |