3021. | 'ஆர வாழ்க்கையின் வணிகராய் அமைதிரோ? அயில் வேல் வீர வாள் கொழு என மடுத்து உழுதிரோ?-வெறிப் போர்த் தீர வாழ்க்கையின் தேவரைச் செருவிடைப் பறித்த வீர வாட் கையீர்!-எங்ஙனம் வாழ்திரோ? விளம்பீர்.' |
'வெறிப் போர் - மூர்க்கச் செயலை மேற் கொண்ட போரில்; தீர வாழ்க்கையின் - வீரத்தோடு கூடிய வாழ்வினால்; தேவரைச் செரு விடைப் பறித்த - தேவர்களிடமிருந்து போரில் பறித்துக் கொண்ட; வீர வாள் கையீர் - வலிமையுள்ள வாளைக் கையில் ஏந்தியவர்களே!; (போரில் தோற்றோடிப் போர்த் தருமத்தையிழந்த நீங்கள் போர்த் தொழிலை விட்டு); ஆர வாழ்க்கையின் வணிகராய் அமைதிரோ - இனி முத்து முதலிய பண்டங்களை விற்று வாழும் வணிகர்களாக அமைவீர்களோ? (அல்லது); அயில் வேல் வீர வாள் - (உழவராகிக்) கூர்மையான வேலையும், வலிமையுள்ள வாளினையும்; கொழு என மடுத்து உழுதிரோ - ஏரின் கொழுவாக மண்ணில் ஆழ்த்தி உழுது பயிரிடப் போகிறீர்களோ?; எங்ஙனம் வாழ்திரோ - எவ்வாறு வாழப் போகின்றீர்கள்?; விளம்பீர்' - சொல்லுங்கள். இவ்வாறு போரில் தோற்றோடி வெட்கங் கெட்ட உங்களுக்குப் போர் வீரராக வாழ வகையில்லை : இனி, நீங்கள் பண்டங்களை விற்று வாழும் வணிகராகவோ, உழுதுண்டு வாழும் வேளாளராகவோ வாழ்வதே உங்களுக்கு அமைவது என்றான். கையீர் - விளி; ஓ - ஐயம். 147 |