தூடணன் எதிர்த்து வர, இராமன் அவனோடு போர்தொடங்குதல்

3022. என்று, தானும், தன் எறி
     கடற் சேனையும், 'இறை நீர்
நின்று காண்டிர் என் நெடுஞ்சிலை
     வலி' என நேராச்
சென்று தாக்கினன்; தேவரும்
     மருள்கொண்டு திகைத்தார்;
நன்று! காத்தி' என்று, இராமனும்
     எதிர் செல நடந்தான்.

    என்று - இவ்வாறு தூடணன் கூறி; 'நீர் இறை நின்று - நீங்கள்
சிறிது நேரம் ஓடாது நின்று; என் நெடுஞ் சிலை வலி - எனது நீண்ட
வில்லின் வலிமையை; காண்டிர்' என - காண்பீர்களாக என்று சொல்லி;
தானும் தன் எறிகடல் சேனையும் - தானும் தன்னுடைய அலை வீசும்
கடல் போன்ற சேனையுமாக; நேராச் சென்று தாக்கினன் - (இராமனுக்கு)
எதிராகச் சென்று போர் செய்தான்; (அந்த உக்கிரத்தைக் கண்டு); தேவரும்
மருள் கொண்டு திகைத்தார் -
தேவர்களும் மயக்கமுற்றுப் பிரமித்தார்கள்;
இராமனும் - இராமபிரானும்; 'நன்று காத்தி' என்று - (உன் சேனையை)
நன்றாகக் காத்துக் கொள் என்று சொல்லி; எதிர் செல நடந்தான் -
(அவனுக்கு) எதிராக நடந்து சென்றான்.

     திகைத்தல் - இன்னது செய்வது என்று தீர்மானிக்க முடியாமல்
பிரமித்து நிற்றல் நின்று காத்தி : திறமையுண்டேல் என்னை எதிர்த்து நின்று
உன்னையும் உன் சேனைகயையும் காப்பாற்றிக் கொள் என்று
பெருமிதத்தோடு கூறிய வீர மொழி.                        148