3023. ஊடு அறுப்புண்ட, மொய் படை;
     கையொடும் உயர்ந்த
கோடு அறுப்புண்ட, குஞ்சரம்;
     கொடிஞ்சொடு கொடியின்
காடு அறுப்புண்ட, கால் இயல்
     தேர்; கதிர்ச் சாலி
சூடு அறுப்புண்ட எனக் கழுத்து
     அறுப்புண்ட, துரகம்.

    மொய் படை - இராமபாணங்களால் வலிய படைக்கருவிகளுடன்;
ஊடு அறுப்புண்ட - இடையே துணிக்கப்பட்டன; குஞ்சரம் - யானைகள்;
கையொடும் உயர்ந்த கோடு அறுப்புண்ட - தும்பிக்கையோடு உயர்ந்து
வளர்ந்த தந்தங்கள் அறுபட்டன; கால் இயல் தேர் - காற்றுப் போல
விரைந்து செல்லக்கூடிய தேர்கள்; கொடிஞ்சொடு - தேர்த் தட்டின்
முன்னேயுள்ள கொடிஞ்சியென்னும் உறுப்போடு; கொடியின் காடு -
கொடிகளின் தொகுதியும்; அறுப்புண்ட - அறுக்கப்பட்டன; துரகம் -
குதிரைகள்; கதிர்ச்சாலி சூடு அறுப்புண்ட என - கதிர்களையுடைய
செந்நெற்பயிர்களின் கொண்டைகள் அறுக்கப்பட்டன போல; கழுத்து
அறுப்புண்ட -
கழுத்து அறுபட்டன.

     இப் பாட்டில் பதாதி, யானை, தேர் குதிரைகளின் அழிவைக்
குறித்துள்ளார். கதிர் முதிர்ச்சியால் தலை சாய்ந்த செந்நெற் பயிரும்
குதிரையும் வடிவில் ஒத்தலால் கழுத்தறுப்புண்ட குதிரைகளுக்கு,
முடியறுப்புண்ட சாலிப் பயிர்கள் உவமையாம். 'உண்ட' என வந்த
ஐந்தனுள், நான்காவது பெயர், மற்றவை - முற்று. கொடிஞ்சி - தேர்மொட்டு;
தாமரை வடிவமாகச் செய்து தேரின் முன்னிடத்து வைக்கப்படுவதோர்
உறுப்பு.                                                     149