3024.துருவி ஓடின, உயிர் நிலை,
     சுடு சரம், துரந்த;
கருவி ஓடின, கச்சையும்
     கவசமும் கழல;
அருவி ஓடின என அழி
     குருதி ஆறு ஒழுக,
உருவி ஓடின, கேடகத்
     தட்டொடும் உடலம்.

    துரந்த - (இராமபிரானால்) செலுத்தப்பட்ட; சுடுசரம் - கொடிய
அம்புகள்; உயிர்நிலை துருவி ஓடின - (அரக்கர்களின் உடம்பில்) உயிர்
நின்ற இடங்களைத் தேடிக் கொண்டு விரைந்து சென்றன (வேறு சில
அம்புகள்); கச்சையும் கவசமும் கழல - அரக்கர்களின் இடைக்கச்சும்
உடற்கவசமும் கழன்றமையால்; கருவி ஓடின - படைக் கலங்கள் விரைந்து
பாய்ந்தன (இன்னும் சில அம்புகள்); அழி குருதி ஆறு - (அவர்களின்
உடல்கள்) சிதைந்ததனாலாகிய இரத்த நதிகள்; அருவி ஓடின என ஒழுக
-
மலையருவிகளாக ஓடின போல இடையறாது பெருகுமாறு; கேடகத்
தட்டொடும் -
(கையில் பிடித்த) கேடகம் என்னும் தட்டையும்; உடலம் -
அவர்களுடம்பையும்; உருவி ஓடின - உள்ளே துளைத்து அப்பாற்
சென்றன.

    சுடுசரம் கழல, அலைப்ப உருவி ஓடின என வினைமுடிவு அமையும். 150