3025. ஆய்ந்த கங்கபத்திரங்கள் புக்கு,
     அரக்கர்தம் ஆவி
தோய்ந்த; தோய்வு இலாப் பிறை முகச்
     சரம் சிரம் துமித்த;
காய்ந்த வெஞ் சரம் நிருதர்தம்
     கவச மார்பு உருவப்
பாய்ந்த; வஞ்சகர் இதயமும்
     பிளந்தன, பல்லம்.

    ஆய்ந்த - (இராமபிரானால்) ஆராய்ந்தெடுத்து எய்யப் பெற்ற;
கங்கபத்திரங்கள் - கங்கபத்திரம் என்னும் ஒருவகை அம்புகள்; புக்கு -
உடம்புக்குள் புகுந்து; அரக்கர் தம் ஆவி தோய்ந்த - அரக்கர்களின்
மார்பிலே அழுந்தின; தோய்வு இலாப் பிறை முகச் சரம் - மேற்
சொன்னவாறு அரக்கர் உடலில் புகாத அர்த்த சந்திர பாணங்கள்; சிரம்
துமித்த -
அவ் அரக்கர் சிலரின் தலைகளைத் துண்டித்தன; காய்ந்த
வெம்சரம் -
(இராமன் எய்த) மிகக் கொடிய சில அம்புகள்; நிருதர்தம்
கவச மார்பு உருவ -
அரக்கருடைய கவசம் அணிந்த மார்பு
ஊடுருவும்படி; பாய்ந்த - நுழைந்தன; பல்லம் - வேறு சில அம்புகள்;
வஞ்சகர் இதயமும் பிளந்தன - வஞ்சனை நிறைந்த அரக்கர்களின்
நெஞ்சையும் பிளந்துவிட்டன.

     இச் செய்யுளில் கங்க பத்திரம், பிறைமுகச்சரம், சரம், பல்லம் ஆகிய
பலவகை அம்புகள் குறிக்கப் பெற்றுள்ளன; அதனால் இது பொருட்பின்வரு
நிலையணியாம். இராக்கதரைக் குறிக்க அரக்கர், நிருதர், வஞ்சகர் என்ற
சொற்கள் அமைந்தமையால் இதுவும் பொருட் பின்வரு நிலையணியாம்.

     கங்க பத்திரம் - கழுகின் இறகையுடையது என்னும் காரணப்
பொருளது. பிறைமுகச் சரம் - பிறைவடிவில் அமைந்த அம்பு.         151