3026. | தூடணன் விடு சுடு சரம் யாவையும் துணியா, மாடு நின்றவர் வழங்கிய படைகளும் மாற்றா ஆடல் கொண்டனன், அளப்ப அரும் பெரு வலி அரக்கர் கூடி நின்ற அக் குரை கடல் வறள்படக் குறைத்தான். |
தூடணன் விடு சுடுசரம் யாவையும் - தூடணன் எய்த கொடிய அம்புகள் அனைத்தும்; துணியா - துணிபடவும்; மாடு நின்றவர் வழங்கிய படைகளும் மாற்றா - அவனருகில் நின்ற அரக்கர்கள் ஏவிய படைக்கலங்களும் அழியவும்; ஆடல் கொண்டனன் - போர் செய்யும் ஆடலைக் கொண்டவனாய் (இராமபிரான்); அளப்பு அரும் பெரு வலி அரக்கர் கூடி நின்ற - அளவிடுவதற்கரிய பெரிய வலிமையையுடைய அரக்கர்கள் ஒன்று கூடி நின்ற; அக் குரைகடல் வறள்படக் குறைத்தான் - ஒலிக்கும் கடல் போன்ற அச் சேனையை வற்றிப் போகும்படி அழித்தான். இராமபிரான் மிக எளிதாக அரக்கர் சேனைக் கடலையழித்தமை கூறுவது இது. மிகக் கொடிய அரக்கர் சேனையைத் தான் ஒருவனே தனியாக அழித்தான் என்பார் 'ஆடல் கொண்டனன் குறைத்தான்' என்றார். துணியா, மாற்றா : உடன்பாட்டு வினைகள். கொண்டனன் : முற்றெச்சம். அரக்கர் படைகளைக் குரைகடல் என்பதற்கேற்ப 'வறள்படக் குறைத்தான்' என்ற நயம் உணரத்தக்கது. 152 |