3027. ஆர்த்து எழுந்தனர் வானவர்;
     அரு வரை மரத்தோடு
ஈர்த்து எழுந்தன, குருதியின்
     பெரு நதி; இராமன்
தூர்த்த செஞ் சரம் திசைதொறும்
     திசைதொறும் தொடர்ந்து,
போர்த்த வெஞ் சினத்து அரக்கரைப்
     புரட்டின, புவியில்.

     (அதுகண்டு) வானவர் - தேவர்கள்; ஆர்த்து எழுந்தனர் -
(மகிழ்ச்சியால்) ஆரவாரஞ் செய்தார்கள்; குருதியின் பெருநதி - இரத்தப்
பேராறுகள்; அருவரை மரத்தோடு - அழித்தற்கரிய மலைகளையும்
மரங்களையும்; ஈர்த்து எழுந்தன - இழுத்துக் கொண்டு சென்றன; இராமன்
தூர்த்த செஞ்சரம் -
இராமபிரான் ஏவி நிரப்பிய செவ்விய அம்புகள்;
திசைதொறும் திசைதொறும் தொடர்ந்து - எல்லாத்திக்குகளிலும்
தொடர்ந்து சென்று; போர்த்த வெம் சினத்து அரக்கரை - அத்
திசைகளை(த் தம் கூட்டத்தால்) மறைத்த கொடிய சினங்கொண்ட இராக்
கதர்களை; புவியில்புரட்டின - தரையில் புரளும்படி செய்தன.

     இராமனுடைய செஞ்சரம் திசைதொறும் தொடர்ந்து போர்த்த வெஞ்
சினத்து அரக்கரைப் புவியில் புரட்டின என்றும் உரைக்கலாம்.

     செஞ்சரம் - வளைவில்லாத நேரிய அம்பு; பகைவரின் இரத்தம்
தோய்ந்து நுனி சிவந்த அம்பு; தீயவரை அழித்து நன்மை புரியும் அம்பு. 153