3028. | தோன்றும் மால் வரைத் தொகை எனத் துவன்றிய நிணச் சேறு ஆன்ற பாழ் வயிற்று அலகையைப் புகல்வது என்? அமர் வேட்டு ஊன்றினார் எலாம் உலைந்தனர்; ஒல்லையில் ஒழிந்தார்; கான்ற இன் உயிர் காலனும் கவர்ந்து, மெய்ம்மறந்தான். |
அமர் வேட்டு ஊன்றினார் எலாம் - போரை விரும்பி நிலை நின்ற அரக்கர்கள் எல்லோரும்; ஒல்லையில் - விரைவிலே; உலைந்தனர் ஒழிந்தார் - மடிந்தொழிந்தார்கள்; காலனும் - யமனும்; கான்ற இன்னுயிர் - (அரக்கர்களின் உடம்பிலிருந்து) வெளியேறிய இனிய உயிர்களை; கவர்ந்து - எடுத்துச் சென்று; மெய்ம் மறந்தான் - உடல் தளர்ந்து வருந்தினான்; தோன்றும் மால்வரைத் தொகை எனத் துவன்றிய - உயர்ந்து விளங்கும் பெரிய மலைகள் கூட்டம் போல நெருங்கிக் கிடந்த; நிணச் சேறு - (அரக்கர்களின்) கொழுப்பாகிய சேற்றை; ஆன்ற - தின்று நிறைந்த; பாழ் வயிற்று அலகையை - பாழ்த்த வயிற்றையுடைய பேய்களைப் பற்றி; புகல்வது என் - சொல்வதற்கு என்ன இருக்கிறது? இராமனை எதிர்த்த அரக்கரெல்லாரும் அழிந்தார்கள்; உயிர்க் கொலையே தன் தொழிலாகக் கொண்ட யமனும் அவர்களின் உயிரை இடையறாது கவர்ந்து செல்லும் தளர்ச்சியால் மெய் சோர்ந்தான் என்பது. அவ்வாறு இறந்த எண்ணற்ற அரக்கர்களின் நிணம் உயர்மலையென நெருங்கிக் கிடக்க அந்த நிணச் சேற்றையெல்லாம் பேய்கள் உண்டுவிட்டன என்று சொல்லி, அவ்வாறு இறந்த அரக்கர்களின் நிணத்தை நிரம்பவுண்டு உடல் பருத்த பேய்க் கூட்டம் பல என்பதைக் குறித்துச் சொல்ல வேண்டுவதில்லை என்ற மற்றொரு பொருளையும் பெற வைத்தார். பாழ் வயிறு - ஊனைத் தின்று ஊனைப் பெருக்கும் பெருவயிறு. 154 |