3029. | களிறு, தேர், பரி, கடுத்தவர் முடித் தலை, கவந்தம், ஒளிறு பல் படை, தம் குலத்து அரக்கர்தம் உடலம், வெளிறு சேர் நிணம், பிறங்கிய அடுக்கலின் மீதாக் குளிறு தேர் கடிது ஓட்டினன் தூடணன், கொதித்தான். |
(அப்பொழுது) தூடணன் - தூடணன் என்னும் சேனைத் தலைவன்; களிறு - யானைகளும்; தேர் - தேர்களும்; பரி - குதிரைகளும்; கடுத்தவர் முடித்தலை - கோபித்துப் போர் செய்த அரக்கர்களின் பொன்முடியணிந்த தலைகளும்; கவந்தம் - (அவர்களின்) குறையுடல்களும்; ஒளிறு பல்படை - விளங்கும் பல வகை ஆயுதங்களையுடைய; தம் குலத்து அரக்கர் தம் - தங்கள் குலத்தில் தோன்றிய சேனைத் தலைவர்களாகிய அரக்கர்களின்; உடலம் - உடல்களும்; வெளிறு சேர் நிணம் - வெண்ணிறமுடைய (அவர்களுடைய) கொழுப்பும்; பிறங்கிய அடுக்கலின் மீதா - (ஆகிய இவை) உயர்ந்து குவிந்ததனாலாகிய மலைகளின் மேலே; குளிறு தேர் கடிது ஓட்டினன் - முழக்கம் செய்கின்ற (தன்) தேரை விரைவில் செலுத்தினான்; கொதித்தான் - (அவ்வாறு தேரைச் செலுத்தியவனாகிய தூடணன் தன் இனத்தவரான அரக்கர்களின் பிணக் குவியல்களைக் கண்டு) மனங் கொதித்தவன் ஆயினான். நால்வகைச் சேனைகளோடு அரக்கரின் கவந்தம், உடல் என்பனவும், அவர்களின் கொழுப்பும் மலை போலக் குவிந்து கிடக்க, அம் மலைகளின் மேல் தூடணன் தன் தேரைச் செலுத்தினான் என்பது. அடுக்கல் : கற்களை அடுக்கினாற் போல இருப்பது : மலை. 155 |