3030. | அறம் கொளாதவர் ஆக்கைகள் அடுக்கிய அடுக்கல் பிறங்கி நீண்டன, கணிப்பு இல; பெருங் கடு விசையால், கறங்கு போன்றுளது ஆயினும், பிணப் பெருங் காட்டில் இறங்கும், ஏறும்; அத் தேர் பட்டது யாது என இசைப்பாம்? |
அறம் கொளாதவர்-தருமத்தைக் கைக் கொள்ளாத அரக்கர்களுடைய; ஆக்கைகள் - உடல்கள்; அடுக்கிய அடுக்கல் - ஒன்றன் மேல் ஒன்றாகக் குவிந்ததனாலாகிய மலைகள்; பிறங்கி நீண்டன - உயர்ந்து நீண்டுள்ளவை; கணிப்பு இல - எண்ணிக்கை இல்லாதனவாம்; பெருங்கடு விசையால் - (ஆதலால்) மிகக் கடுமையான வேகத்தால்; கறங்கு போன்று உளது ஆயினும் - காற்றாடி போன்று உள்ளதானாலும்; அத்தேர் - தூடணன் ஏறிய அத்தேர்; பிணப் பெருங்காட்டில் - பிணக்குவியல்களாகிய காட்டிலே; இறங்கும் ஏறும் - பள்ளமான இடங்களில் இறங்கும் மேடான இடங்களில் ஏறும்; (அத்தேர்) பட்டது - உற்ற இடர்நிலையை; யாது என இசைப்பாம் - நாம் என்ன வென்று சொல்லுவோம்? (கூறவியலாது). தூடணனது தேர் எண்ணிக்கையற்ற மலை போன்ற பிணக்குவியல்களில் ஏறியிறங்குதலால் இடறி மிகத் துன்பப்பட்டது என்பது. விரைந்து செல்வதில் தேர்க்குக் காற்றாடி உவமை. 156 |