3031. | அரிதின் எய்தினன் - ஐ-ஐந்து கொய் உளைப் பரியால் உருளும் ஆழியது ஒரு தனித் தேரினன், உலகத்து இருளை நீக்கிய இந்துவின் பொலிகின்ற இராமன் தெருளும் வார் கணைக் கூற்று எதிர், ஆவி சென்றென்ன. |
(தூடணன்) கொய் உளை ஐ ஐந்து பரியால் - அழகாகக் கத்தரிக்கப்பட்ட பிடரி மயிர்களையுடைய இருபத்தைந்து குதிரைகள் பூட்டியதால்; உருளும் ஆழியது - (எளிதில்) உருளும் சக்கரங்களையுடையதான; ஒரு தனித் தேரினன் - ஒப்பற்ற தனித்த தேரையுடையவனாய்; கூற்று எதிர் - யமனுக்கு எதிரிலே; ஆவி சென்று என்ன - உயிர் வலியச் சென்றாற் போல; உலகத்து இருளை - இவ்வுலகிலுள்ள இருட்டை; நீக்கிய இந்துவின் - ஒழிக்கின்ற சந்திரன் போல; பொலிகின்ற இராமன் - விளங்குகின்ற இராமனுடைய; தெருளும் வார்கணை - தெளிவான நீண்ட அம்புக்கு எதிரில்; அரிதின் எய்தினன் - மிகுந்த சிரமப்பட்டு வந்து சேர்ந்தான். யமனுக்கு எதிரே அவனால் கவரப்படுவதற்குரிய உயிர் வந்து நின்றாற் போல இராமபிரான் கணைக்கு எதிரே இருபத்தைந்து குதிரைகள் பூட்டிய தனித் தேரையுடைய தூடணன் அரிதின் எய்தினான் என்பது. இராமனுக்குச் சந்திரன் உவமை - குளிர்ச்சி தந்து உயிர்களை மகிழ்விப்பதால். குறித்த இலக்கைத் தவறாது அழிப்பது பற்றி இராம பாணத்திற்குக் கூற்றுவன் ஒப்பாவான். இராமபாணத்தால் இவன் உடனே அழிதற்குக் காரணமாதலால் 'கூற்றெதிர் ஆவி சென்றென்ன' என்றார். 'இருளின் நீங்கிய இந்து' - சூழ்ந்திருந்த அரக்கர் பட்டொழியத் தான் மட்டும் நின்ற இராமபிரானுக்கு உவமையாம். 157 |