தூடணன் மாய்தல்

3032.சென்ற தேரையும், சிலையுடை
     மலை எனத் தேர்மேல்
நின்ற தூடணன்தன்னையும்
     நெடியவன் நோக்கி,
'நன்று-நன்று, நின் நிலை!'
     என, அருள், இறை நயந்தான்
என்ற காலத்து, அவ் வெய்யவன்
     பகழி மூன்று எய்தான்.

    சென்ற தேரையும் - (அவ்வாறு எதிரில்) வந்த தேரையும்; சிலை
உடை மலை என -
வில்லையேந்திய ஒரு மலை போல; தேர் மேல்
நின்ற -
அத் தேரின் மேல் (வில்லேந்தி) நின்ற; தூடணன் தன்னையும் -
தூடணனையும்; நெடியவன் நோக்கி - இராமபிரான் பார்த்து; 'நின் நிலை
நன்று நன்று' என -
'(போரில்) உனது உறுதி நிலை மிக நன்றாயிருந்தது'
என்று; இறை அருள் நயந்தான் - அவனைச் சிறிது அருளோடு
மதித்தான்; என்ற காலத்து - அவ்வாறு கூறிய அச் சமயத்தில்; அவ்
வெய்யவன் -
அந்தக் கொடியவனான தூடணன்; பகழி மூன்று எய்தான்
-
மூன்று அம்புகளைத் தொடுத்தான்.

     தேரின் மேல் வில்லேந்தியவனாகத் தூடணன் வந்து நிற்க, அவனது
தளராத வீரத்தை இராமன் பாராட்டி நிற்கையில் அத் தூடணன் இராமன்
மேல் மூன்று கணைகளை விடுத்தான் என்பது.

     சிலையுடை மலை - வில்லேந்திய தூடணனுக்கு உவமை :
இல்பொருளுவமை. நன்று நன்று - அடுக்கு உவமை பற்றியது. நெடியவன் -
எங்கும் வியாபித்த திருமாலாகிய இராமபிரான். தன் பகைவனான
தூடணனது வீரத்தைப் பாராட்டிய இராமனது சிறப்பைக் காட்டுவது இது.
இறை - சிறிது.                                              158