3033. | தூர வட்ட எண் திசைகளைத் தனித்தனி சுமக்கும் பார எட்டினோடு இரண்டினில் ஒன்று பார் புரக்கப் பேர விட்டவன், நுதல் அணி ஓடையின் பிறங்கும், வீர பட்டத்தில் பட்டன, விண்ணவர் வெருவ. | தூர - நெடுந்தூரம் நீண்ட; வட்ட - வட்டமாய் அமைந்துள்ள; எண் திசைகளை - எட்டுத் திக்குகளையும்; தனித்தனி சுமக்கும் - தனித் தனியே சுமக்கின்ற; பார எட்டினோடு - வலிய எட்டுத் திசை யானைகளோடு சேர்ந்த; இரண்டினில் ஒன்று - (பூமியைச் சுமக்கின்ற மற்ற இரண்டான ஆதிசேடன், ஆதி கூர்மம் என்ற) இரண்டனுள் ஒன்றாகிய ஆதிசேடனை; (ஆதிசேட அம்சமான பாதுகைகளை); பார் புரக்க - உலகை ஆட்சி செய்யுமாறு; பேர விட்டவன் - (அயோத்திக்குத்) திருப்பியனுப்பியவனான இராமபிரானின்; நுதல் அணி - நெற்றியில் அணிந்துள்ள; ஓடையின் பிறங்கும் - (யானையின்) முகபடாம் போல விளங்குகின்ற; வீர பட்டத்தில் - வீர பட்டிகையில்; விண்ணவர் வெருவ - தேவர்களும் அஞ்சும்படி; பட்டன - (அந்த மூன்று அம்புகளும்) தாக்கின. |