3035.தேவர் ஆர்த்து எழ, முனிவர்கள்
     திசைதொறும் சிலம்பும்
ஓவு இல் வாழ்த்து ஒலி கார்க் கடல்
     முழக்கு என ஓங்க,
'கா அடா இது, வல்லையேல், நீ'
     என, கணை ஒன்று
ஏவினான்; அவன் எயிறுடை
     நெடுந் தலை இழந்தான்.

    தேவர் ஆர்த்து எழ - தேவர்கள் மகிழ்ந்து ஆரவாரம் செய்யவும்
முனிவர்கள் திசைதொறும் சிலம்பும் - முனிவர்கள் எல்லாத் திக்குகளிலும்
நின்று ஆரவாரத்தோடு கூறுகின்ற; ஓவு இல் வாழ்த்து ஒலி - ஒழிவில்லாத
வாழ்த்துகளின் ஓசை; கார்க் கடல் முழக்கு என ஓங்க - கரிய கடலின்
முழக்கம் போல மிகுந்து விளங்கவும்; 'நீ வல்லையேல் இது கா அடா'
என -
'நீ வல்லமையுள்ளவனானால் இந்த அம்பைத் தடுத்து உன்னைக்
காத்துக் கொள்ளடா' என்று வீரவாதம் கூறி; கணை ஒன்று ஏவினான் -
இராமபிரான் ஓர் அம்பைத் தொடுத்தான்; அவன் - அந்த அரக்கனான
தூடணனும்; எயிறு உடை நெடுந்தலை இழந்தான் - கோர
தந்தங்களையுடைய தன் பெரிய தலையை இழந்தான்.

     கார்க் கடல் முழக்கு : நாற்றிசையிலும் நின்று நான்கு வேத
மந்திரங்களைக் கொண்டு ஆசி கூறும் பேரொலிக்குக் கார்க் கடல் முழக்கு
உவமையாம்.                                                161