கலி விருத்தம்

கரன் வெகுண்டு, பெரும்படையுடன் போருக்கு எழுதல்

3036. தம்பி தலை அற்ற படியும்,
     தயரதன் சேய்
அம்பு படையைத்
     துணிபடுத்ததும், அறிந்தான்,
வெம்பு படை விற் கை விசயக்
     கரன் வெகுண்டான்-
கொம்பு தலை கட்டிய கொலைக்
     கரியொடு ஒப்பான்.

    கொம்பு தலை கட்டிய - தந்தங்கள் முகத்தில் உறுதியாக
விளங்குகின்ற; கொலைக் கரியோடு ஒப்பான் - கொல்லுதலில் வல்ல
யானை போன்றவனான; வெம்பு படை வில் கை விசயக் கரன் -
உக்கிரமான பல வகைப் படைக்கலங்களையும் வில்லையும் ஏந்திய
கைகளையும், வெற்றியையுமுடைய கரன்; தம்பி தலை அற்றபடியும் - தன்
தம்பியான தூடணன் (இராமனது அம்பால்) தலை அறுபட்டு அழிந்ததையும்;
தயரதன் சேய் அம்பு - தசரதனின் மைந்தனான இராமனது பாணம்;
படையைத் துணி படுத்ததும் - தன் அரக்கப் படைகளை வெட்டித்
துண்டாடியதையும்; அறிந்தான் - அறிந்து; வெகுண்டான் - சினங்
கொண்டான்.

     இராமபிரானால் தூடணன் தலையறுபட்டதையும், அரக்கச் சேனை
துண்டு பட்டதையும் அறிந்து, கரன் வெகுண்டான் என்பது.

     'கொம்பு தலை கட்டிய - கரனது முகத்தில் வெளிப்பட்டுக்
காணப்படுகின்ற கோர தந்தங்கள் யானைத் தந்தம் போல்வன என்பது
விளங்கும்.                                                 162