3037. | அந்தகனும் உட்கிட, அரக்கர் கடலோடும் சிந்துரம். வயப் புரவி, தேர் திசை பரப்பி, இந்துவை வளைக்கும் எழிலிக் குலம் என, தான் வந்து, வரி விற் கை மத யானையை வளைத்தான். |
அந்தகனும் உட்கிட - (கோபங்கொண்ட கரன்) யமனும் அஞ்சும்படி; அரக்கர் கடலோடும் - இராக்கதர் படையுடனே; சிந்துரம் - யானைகளையும்; வயப் புரவி - வலிய குதிரைகளையும்; தேர் - தேர்களையும்; திசை பரப்பி - எல்லாத் திசைகளிலும் பரவியிருக்கச் செய்து; இந்துவை வளைக்கும் - சந்திரனை வளைத்துக் கொண்ட; எழிலிக் குலம் என - மேகக் கூட்டங்கள் போல; தான் வந்து - அரக்கனாகிய கரன் வந்து; வரி விற் கை மத யானையை - கட்டமைந்த வில்லையேந்திய கையையுடைய மதயானை போன்ற இராமபிரானை; வளைத்தான் - சூழ்ந்து கொண்டான். அரக்கனான கரன் நான்கு வகைச் சேனைகளையும் கொண்டு இராமபிரானை வளைத்தான் என்பது. இராமனுக்குச் சந்திரனும், அரக்கர் கூட்டத்திற்கு மேகக் கூட்டமும் உவமை. வரி விற்கை மத யானை - இல்பொருளுவமை. எழிலி - மேகம் கடல், யானை : உவமையாகுபெயர்கள். 163 |