3038. | அடங்கல் இல் கொடுந் தொழில் அரக்கர், அவ் அனந்தன் படம் கிழிதர, படிதனில், பலவிதப் போர், கடம் கலுழ் தடங் களிறு, தேர், பரி, கடாவி, தொடங்கினர்; நெடுந்தகையும் வெங் கணை துரந்தான். |
அடங்கல் இல் - கட்டுக்கடங்காத; கொடுந் தொழில் அரக்கர் - கொடிய செயல்களையுடைய இராக்கதர்கள்; அவ் அனந்தன் படம் கிழிதர - அந்த ஆதிசேடனது படம் கிழிந்துவிடும்படி; படிதனில் - பூமியில்; கடம் கலுழ் தடங் களிறு - மத நீர் பொழியும் பெரிய யானைகளையும்; தேர் பரி - தேர்களையும் குதிரைகளையும்; கடாவி - மிகுதியாகச் செலுத்தி; பல விதப் போர் தொடங்கினர் - பல வகைப்பட்ட போரைச் செய்யத் தொடங்கினார்கள்; நெடுந் தகையும் - பண்பால் சிறந்த இராமபிரானும்; வெங் கணை துரந்தான் - கொடிய அம்புகளை விரைவாக எய்தான். அரக்கர் அடங்காமல் சேனைகளோடு மீண்டும் போர் தொடங்க, இராமபிரானும் கொடிய கணைகளை ஏவினான் என்பது 'அவ் அனந்தன் படம் கிழிதர' என்றது படைகள் யாவும் ஓரிடத்தே ஒருங்கே திரண்ட பார மிகுதி பற்றி. கடம் : கன்னம் இங்கே - மதநீர்க்கு இடவாகு பெயர். நெடுந்தகை : பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. 164 |